அதிரும் தமிழக அரசியல்..!! ரூ. 50 கோடி குதிரை பேரம்: அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

Estimated read time 1 min read

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசிய வழக்கில், மூன்றாம் நாளாக இன்று திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டார்.

அதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தின் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறு என தெரிவித்தார்.

அவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ”யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள். முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா” என கிண்டலாக பேசினார்.

தொடர்ந்து, ”அவர் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. பழுத்த மரம் தான் கல்லடி படும்” என பதிலளித்தார்.

லாரி ஏற்றி கொலை செய்த முயற்சித்ததாக அவர் கூறியது குறித்த கேள்விக்கு, “ஒருவேளை அவர் லாரியை மடக்கி ரூ. 300 கேட்டு இருக்கலாம். கோபத்தில் அவர் மீது இந்த சம்பவம் நடத்திருக்கலாம்” என கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான விஜி சரவணன், தன்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க-வில் இணைய அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் ஒருவர் ரூ.50 கோடி பேரம் பேசியதாக நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், அதற்கு இணங்க மிரட்டல் விடுத்ததாகவும், லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

You May Also Like

More From Author