லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி: சமயோசிதமாக ரயிலை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்!

Estimated read time 0 min read

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு (ரயில் ஓட்டுநர்) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும், தனது உடல்நிலையை கருதியும், அவர் ரயிலை ஆவடி நிலையத்திலேயே நிறுத்தியுள்ளார். உடனடியாக இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கமாக செல்கிற ரயில் திடீரென ஆவடி ரயில் நிலையத்தில் வெகுநேரம் நின்றதால், அதிலிருந்த பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகினர். ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், பின்னர் லோகோ பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது.

இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று லோகோ பைலட்டை ஏற்பாடு செய்தது. ஆனால், அவர் வந்து சேருவதற்குள் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மாற்று லோகோ பைலட் ஆவடி ரயில் நிலையம் வந்தடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் முக்கால் மணிநேர தாமதத்திற்குப் பிறகு ஆவடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

இதனால் மாலை நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணித்த அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் ஆவடி ரயில் நிலையத்திலேயே காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

You May Also Like

More From Author