சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 31-வது ‘தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு’ நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தென் மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாகவும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசு சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி, மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை இருக்கக் கூடாது என்றும், தற்போதுள்ள 543 என்ற நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் உயர்த்தவோ அல்லது மாற்றவோ கூடாது என்றும் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ பலம் எந்த நிலையிலும் குறையக் கூடாது என்பதே அந்தத் தீர்மானத்தின் முக்கியமான சாரம்சமாக இருந்தது. ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் பேசிய பேச்சு அமைந்திருந்தது.
கூட்டத்தில் பேசிய அவர், “மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறையாத வகையில் அதனைச் சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வெறும் ஒரு வாரத்திற்குள்ளாகவே, மத்திய அமைச்சரின் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதிநிதித்துவம் குறையாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற வகையில் முதல்வர் பேசியுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
