உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில், சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லாட் அருகே சக்ரதா–த்யூனி மலைச்சாலையில் அக்டோபர் 2-ஆம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. காரில் 3 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தின் முழுக் காட்சியும் காரில் இருந்த கேமராவில் வெறும் 22 விநாடிகளில் பதிவாகியுள்ளது.
காணொளியில், மலைச்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழப்பது தெரிகிறது. பின்னர் சாலையோர மின்கம்பத்தில் மோதி, அடுத்த சில நொடிகளிலேயே ஆழமான பள்ளத்தில் கார் பாய்கிறது. விபத்தில் டர்கேஷ் சவுத்ரி என்ற 39 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரான சுனில் மண்டல் மற்றும் ரிஷப் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
मौत का लाइव वीडियो!
चकराता–मसूरी राष्ट्रीय राजमार्ग पर सिलावड़ा गांव के पास शुक्रवार शाम को श्रद्धालुओं से भरी फोर्ड कार अचानक अनियंत्रित होकर करीब 200 मीटर गहरी खाई में जा गिरी। हादसे में एक व्यक्ति की मौके पर मौत हो गई, जबकि कार सवार दो लोग घायल हो गए । https://t.co/rTvF1dy0Qq— Bhupi Panwar (@askbhupi) October 4, 2026
விபத்து நடந்த பள்ளத்தின் ஆழம் காரணமாக மீட்புப் பணியும் சவாலாக இருந்தது. காயமடைந்தவர்கள் பள்ளத்துக்குள் சிக்கியிருப்பது தெரியவந்ததும், காவல்துறையினர் மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கயிறுகளைப் பயன்படுத்தி சுமார் 100 மீட்டர் கீழே இறங்கிய மீட்புக் குழுவினர், இருவரையும் பத்திரமாக மீட்டு த்யூனி சமூக சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சாலையின் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குப் பிறகு இரண்டு நாள்கள் கழித்து வெளியாகியுள்ள இந்தக் காணொளியை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டும்போது வேகம் மற்றும் வளைவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

