சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ புதன்கிழமை அன்று மணிலாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, உலகில் முக்கிய நாடுகளான சீனாவும் இந்தியாவும் மானுடத்தின் நலனை முன்னிறுத்தி தங்களது பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அதோடு, இரு நாடுகளும், இரு நாட்டுறவில் நேர்மறையான முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச உறவுகளில் பலதுருவமயமாக்கத்தையும், மேலதிக ஜனநாயகத் தன்மையையும் வலுப்படுத்துவதற்கு சீனாவும் இந்தியாவும் நேர்மறையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நடப்பு ஆண்டில் இந்தியா நடத்தவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்குச் சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.
பின்னர் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தைவான் மற்றும் சிசாங் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டதோடு, சீனாவின் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது என்றும் கூறினார்.
மேலும், எதிர்கால நோக்கில் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
