கோ. கேசவன் – இலக்கியத் திறனாய்வுத் துறையின் தூண்!

Estimated read time 1 min read
பேராசிரியர் கோ. கேசவன். 80-களில் சமூகவியல் நோக்கில் தமிழ் இலக்கியத் திறனாய்வை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமான ஒருவர்.

மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவை பற்றி மிக ஆழமான ஆய்வுகளை முன்வைத்தவர்.
பேரா. க.கைலாசபதி, பேரா. க.சிவத்தம்பி, பேரா. நா. வானமாமலை போன்றோரின் வரிசையில் இடம் பிடித்தவர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.
1970 முதல் அவரது மறைவு வரை (1998) 28 ஆண்டுகள் தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
அவருடைய முதல் நூலாகிய ‘மண்ணும் மனித உறவுகளும்‘ என்ற நூலுக்கும் ‘இயக்கமும் இலக்கியப் போக்குகளும்’ என்ற நூலுக்கும் பேரா. க.கைலாசபதி அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார்.
‘தனக்கு ஆராய்ச்சிப் பயணத்தில் மற்றொரு தோழன் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி‘ என்று அவர் தெரிவித்திருந்தார்.
‘தமிழகத்தின் உயர்கல்வி, மாணவர் மட்டங்களில் மார்க்சிய விமர்சனம் கால்கோள் கொண்டுவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாக விளங்கியவர் கோ.கேசவன்’ என்று பேரா.க. சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.
கேசவனின் முனைவர் பட்ட ஆய்வானது பாரதியியல் ஆகும்.
‘பள்ளு இலக்கியம் – ஒரு சமூகவியல் பார்வை’, கதைப் பாடல்களும் சமூகமும்‘ ‘இலக்கிய விமரிசனம் – ஒரு மார்க்சியப் பார்வை’ ‘தமிழ்ச் சிறுகதைகளில் உருவம்’, ‘திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும்’, ‘பாரதியும் அரசியலும்’, ‘தலித் இலக்கியம் – சில கட்டுரைகள்’ ‘பாரதி முதல் கைலாசபதி வரை’ ஆகிய நூல்கள் தமிழ் இலக்கியம், மொழி சம்பந்தப்பட்ட இவரது குறிப்பிடத்தக்க ஆய்வுகளாகும்.
தமிழ்ச் சமூகம் பற்றி வேறு பல ஆய்வு நூல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.
பேரா. க.கைலாசபதி போன்றே இவரும் திடீரென்று தனது 51 வயதிலேயே இவ்வுலகத்தைவிட்டு மறைந்தார் என்பது மிகுந்த வேதனைக்குரியது.
எனக்கும் இவருக்கும் சமூக, இலக்கியத் தளங்களில் 30 ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு என்பதில் மகிழ்வடைகிறேன.

You May Also Like

More From Author