மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Estimated read time 1 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் மந்தமாக நடைபெறுவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டில் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2021ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஓராண்டிற்கும் மேலாக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் மந்த நிலையில் திருப்பணிகள் நடைபெறுவதாகவும் அப்பணிகளில் சில குறைகள் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கடந்த கும்பாபிஷேகத்தின் போது நிரப்பப்பட்ட வரகரிசி மற்றும் தானியங்கள் கலசங்களில் மாற்றப்படாமல் உள்ளதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அம்மன் சன்னதி கோபுரக் கலசங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதாகவும், ஒரு கலசம் இன்னும் வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கோபுரங்களின் அடிப்பகுதியில் உள்ள சிலைகள் சேதமடைந்து இருப்பதாகவும், செடி-கொடிகள் அகற்றப்படாமல் திருப்பணிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் பழுதடைந்து கிடப்பதுடன், போதிய கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கட்டடங்களின் மீது பக்தர்கள் ஏற வாய்ப்புள்ளதால் அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

கோவிலை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் நடைபாதைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்றும் வணிக நோக்கத்தைத் தவிர்த்து, அனைத்துத் தரப்பு பக்தர்களும் எளிதாக சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆகம விதிகளின்படி பணிகளை விரைந்து முடித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You May Also Like

More From Author