பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,9ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளார்.அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்தார். இருவரும் பொதுக்குழுவை அறிவித்ததால் பாமகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 08) ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:இந்த மனு மீது தீர்ப்பு வழங்க 10 நிமிடம் போதும். ஆனால் அவ்வாறு செய்ய நான் விரும்பவில்லை, ராமதாசையும், அன்புமணியையும் இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் வரச் சொல்லுங்கள். இருவரிடமும் தனித்தனியாக பேச விரும்புகிறேன். அவர்களிடம் நேரிடையாக பேச விரும்புகிறேன். இந்த விசாரணை என்னுடைய சேம்பரில் நடக்கும். அப்போது வக்கீல்கள், பா.ம.கவினர் என்று யாருக்கும் அனுமதி கிடையாது” என்றார்.இது எனது வேண்டுகோள். அனைவரின் நலனுக்காகவும், பா.ம.க., நலன் கருதியும், இருவரிடம் நானே பேச்சுவார்த்தை நடத்த போகிறேன்.
நீதிமன்ற வேலை நேரம் முடிந்ததும், இருவரும் எனது அறைக்கு வர வேண்டும்.
இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.