மயிலும் நாகமும் பூஜித்த அபூர்வ முருகன்…. சக்திமலை கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்….!! 

Estimated read time 0 min read

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சக்திமலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோவில். இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் கையில் வேலுடனும், இடது பாகத்தில் மயில் இறகுடனும் காட்சி தருவது மிகவும் அபூர்வமான தோற்றமாகும். சோமாஸ்கந்த வடிவில் அமைந்த இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை மற்றும் பைரவர் ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன.

ஒரு காலத்தில் அடர்ந்த மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் இருந்த ஒரு சுயம்பு மூர்த்தத்தை, தினமும் ஒரு மயிலும் நாகமும் தொடர்ந்து ஆறு மாதங்களாக பூஜித்து வந்தன. இதைக் கண்ட சிறுவர்களும் ஊர் பெரியவர்களும் வியந்து, அந்த சுயம்பு மூர்த்தத்தை முருகப்பெருமானாக வழிபட்டு சிறிய கோவில் கட்டினர். காலப்போக்கில் பக்தர்கள் உதவியுடன் அர்த்த மண்டபம், மகாமண்டபம் கட்டப்பட்டுப் பிரம்மாண்ட கோவிலாக உருவெடுத்தது.

இக்கோவிலில் வழக்கமான தண்டாயுதத்திற்குப் பதிலாகக் கையில் சக்தி வாய்ந்த வேலுடன் முருகன் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். மேலும், இங்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் மற்றும் சூரசம்ஹாரம் போன்ற முக்கியத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து மயில் பீலியால் தடவி திருநீறு பூசிக் கொண்டால் நோய்கள் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதேபோல, குடும்பப் பிரச்சனை மற்றும் நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்கள் இங்கு ‘சத்ரு சம்ஹார திரிசத அர்ச்சனை’ செய்து வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்களுக்குச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோவில், கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், குன்னூர் இரயில் நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பதால் பக்தர்கள் சுலபமாகச் சென்று வரலாம்.

You May Also Like

More From Author