வரும் 12ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம்- இபிஎஸ் அறிவிப்பு

Estimated read time 1 min read

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்திற்கு “பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டியதை மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள த.வெ.க. அரசைக் கண்டித்தும் பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு, மக்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்புடன் வாழ்வதற்குத் தேவையான திட்டங்களையும், வசதிகளையும் செய்து தருவதற்கு பதிலாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, தமிழ் நாட்டு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தந்திட்ட மாபெரும் தலைவர்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்கின்ற வேலையில் த.வெ.க. அரசு ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1984-ல் முதலமைச்சராக இருந்தபோது, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, சிறுகமணி பேரூராட்சி, பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்திற்கு “பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டினார். தற்போது த.வெ.க. அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தப் பேருந்து நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. த.வெ.க. அரசின் இச்செயல், கோடானு கோடி கழகத் தொண்டர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் மீது மாறாத பாசம் கொண்டிருப்பவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. த.வெ.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, சிறுகமணி பேரூராட்சியில் உள்ள பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்திற்கு “பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டியதை மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள த.வெ.க. அரசைக் கண்டித்தும்; பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், 12.9.2026 – சனிக் கிழமை காலை 10 மணியளவில், பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகில், கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான திரு. R. மனோகரன் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இன்னாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் த.வெ.க. அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்டிருக்கும் கோடானு கோடி தொண்டர்கள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author