ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தீர்வை, அரசியல் மற்றும் தூதாண்மை திசைக்கு மீண்டும் திரும்புவதை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன துணை நிரந்தரப் பிரதிநிதி சுன் லேய் 10ம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுன் லேய் கூறுகையில், அமெரிக்காவும் ஈரானும் கையொப்பமிட்ட புரிந்துணர்வு குறிப்பாணையில் திட்டமிட்ட 60 நாட்கள் போர் நிறுத்தக் காலம் முடிந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா தடை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அமெரிக்க-ஈரான் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதுடன் பிராந்திய நிலைமை மீண்டும் பதற்றமாகியுள்ளது. அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான பல்வேறு தரப்புகளின் முயற்சிகளுக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு சீனா கவலை தெரிவிக்கின்றது என்று கூறினார்.
தொடர்புடைய தரப்புகள், ஆயுத ஆற்றலைக் கைவிட்டு, புரிந்துணர்வு குறிப்பாணையின் செயலாக்கத்தைக் கூடிய விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும், அரசியல் மற்றும் தூதாண்மை முறையில் ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலைமையில், ஐ.நா பாதுகாப்பவை ஆக்கமுடன் பங்காற்றி, பேச்சுவார்த்தைக்குப் பொருந்திய சூழலை உருவாக்க வேண்டும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையை அரசியல் முறையில் தீர்ப்பது, சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு முறைமையைப் பேணிக்காப்பது, மத்திய கிழக்கு பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை முன்னெடுப்பது ஆகியவற்றுக்கு அயராத முயற்சியை சீனா மேற்கொள்ளும் என்றும் சுன் லேய் தெரிவித்தார்.
