மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், ஆவணி அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து, கணேச ஜனனி அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பாடல்கள் மற்றும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடி வழிபட்டனர். பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையின்போது “அம்மா அங்காளம்மா” என பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆவணி அமாவாசையை ஒட்டி தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூரில் குவிந்தனர்.
