டெல்லியில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பு…!!! 

Estimated read time 1 min read

டெல்லியில் அக்டோபர் 1 முதல் செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தச் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

PUC சான்றிதழ் என்பது வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையின் அளவு அரசு நிர்ணயித்த வரம்புக்குள் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணமாகும். பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு இந்தச் சான்றிதழ் அவசியம். வாகனத்தின் முதல் பதிவு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த பிறகு, செல்லுபடியாகும் PUC சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது அதைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

சான்றிதழ் இல்லாத வாகனங்களைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதற்காக டெல்லி அரசு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்குகிறது. மேலும், தலைநகரில் உள்ள PUC மையங்களின் கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளைத் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மேலும் நம்பகமானதாகவும் திறமையானதாகவும் மாற்ற முடியும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்களுக்கு இந்தச் சான்றிதழ் கட்டாயமில்லை. அவற்றிலிருந்து புகை வெளியேற்றம் இல்லாததால் PUC விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வாகன உரிமையாளர்கள் தங்களது சான்றிதழின் காலாவதி தேதியைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். வாகனங்களின் மாசு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுடன், காற்றின் தரத்தை மேம்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

You May Also Like

More From Author