உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் 25 முதல் 27 வரையிலான நாட்களில் கனமழை சுழன்றடித்தது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போன அந்த மூன்று நாட்களில், யாருமே எதிர்பாராத ஒரு விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீடுகளை விட்டு வெளியேறவே மக்கள் அஞ்சிய அந்தப் பேரிடர் காலத்தில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ததாக தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் பதிவாகியிருந்தது.
செப்டம்பர் 25-ஆம் தேதி மட்டும் சம்பல் மாவட்டத்தின் 8 வட்டங்களிலும் சேர்த்து 3,209 தொழிலாளர்கள் பணிபுரிந்ததாகப் பதிவிடப்பட்டது. தொடர்ந்து 26-ஆம் தேதி 756 தொழிலாளர்களும், 27-ஆம் தேதி 1,622 தொழிலாளர்களும் களத்தில் இருந்ததாகப் பதிவுகள் காட்டின. இப்படி மழையிலும் ஓயாது உழைத்ததாகக் காட்டி, மூன்று நாட்களில் மட்டும் மொத்தம் 5,587 போலி வருகைப் பதிவுகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ₹16 லட்சம் வரை முறைகேடு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
बारिश के दौरान मनरेगा की फर्जी हाजिरी? 16 लाख के घोटाले का आरोप
#NMMSPortal #ATDigital #Sambhal #UttarPradesh https://t.co/Gq54qeHq8a
— AajTak (@aajtak) October 5, 2026
இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிகாரிகள் தரப்பில் இருந்து சற்றே மாறுபட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன. “சம்பல் பகுதியில் செப்டம்பர் 25 மாலைக்குப் பிறகுதான் மழை தீவிரமடைந்தது; மேலும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 90-க்கும் மேற்பட்ட மாஸ்டர் ரோல்களில் பூஜ்ஜியம் வருகைப் பதிவே பதிவு செய்யப்பட்டுள்ளது” என மகாத்மா காந்தி திட்டத்தின் மாவட்டத் துணை ஆணையர் ராம் ஆசிஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மழைக்காலத்திலும் அங்கன்வாடி மையங்கள், அன்னபூர்ணா பவன்களின் உள் பணிகளான கட்டுமான வேலைகள் மற்றும் சுமார் 1,389 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் சாத்தியமே. இருப்பினும், குளங்கள் சீரமைப்பு தொடர்பான பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் தவறுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.
