தாய்லாந்து நாட்டின் கஞ்சன்பூரி மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான எராவன் தேசியப் பூங்காவிற்குச் சுற்றுலா சென்ற 60 வயது ஜெர்மன் பயணி ஒருவர், அருவி நீரில் கால் நனைத்துக் கொண்டிருந்தபோது ராட்சத மானிட்டர் உடும்பு தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
நவம்பர் 17ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்த நிலையில், நீரில் நீந்தி வந்த உடும்பு திடீரெனப் பயணியின் காலைக் கடித்து ஆழமான காயத்தை ஏற்படுத்தியதுடன், அவரை நீருக்குள் இழுக்கவும் முயன்றுள்ளது. உடனடியாகத் தகவலறிந்து விரைந்து வந்த பூங்கா ஊழியர்கள் முதலுதவி அளித்து, அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகத் தா க்ரதான் மருத்துவமனைக்கும் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
பயணி முழுமையாகக் குணமடைந்து தாயகம் திரும்பும் வரை மருத்துவக் குழுவினருடன் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தேசியப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தேசியப் பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு 4 லட்சம் தாய் பாட் வரை காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கூட்டம் அதிகம் கூடும் நீர்நிலைகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், வனக் காவலர்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உடும்புகளைப் பாதுகாப்பாகப் பிடித்து வேறு பொருத்தமான வனப்பகுதிகளில் விடுவதற்காகப் பூங்காவில் வலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன், நீர்நிலைகளில் இறங்கும்போதும் புதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு அருகே செல்லும்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆபத்தான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் பாதுகாக்கப்பட்ட உயிரினப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிய நீர் மானிட்டர் உடும்புகள் சுமார் 7 அடி நீளம் வரை வளரக்கூடியவை என்பதால், இயற்கைச் சுற்றுலாத் தளங்களில் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
