செயற்கை நுண்ணறிவு , கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சேவைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியால் இந்தியாவின் டேட்டா சென்டர் துறை மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. ஏவான் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் நிறுவப்பட்ட டேட்டா சென்டர் திறன் நான்கு மடங்கிற்கும் அதிகமாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான புதிய கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த அசுர வளர்ச்சியானது மின்சாரத் தட்டுப்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற பல்வேறு புதிய ஆபத்துகளையும் சந்தித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகரித்து வரும் ஏஐ பணிகளால் மின் நுகர்வு தாறுமாறாக அதிகரித்து வருவதால், மின் கட்டமைப்பு மற்றும் இணைப்புகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கல்களைச் சமாளிப்பதற்காகத் துறைசார் நிறுவனங்கள் சோலார், பேட்டரி சேமிப்பு மற்றும் ஹைப்ரிட் போன்ற மாற்று எரிசக்தி தீர்வுகளை நோக்கித் தீவிரமாக நகர்ந்து வருவதாக ஏவான் நிறுவனத்தின் வணிக ரிஸ்க் தீர்வுகள் பிரிவின் நிர்வாக இயக்குநர் சுஷாந்த் சரின் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகப் பராமரிப்பு மற்றும் தீ விபத்து தொடர்பான அபாயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகளாவிய டேட்டா சென்டர்களின் மின்சாரத் தேவை 2030-க்குள் 165 சதவீதம் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புச் சவால்களுடன் சேர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தீவிரமடைந்து வரும் சைபர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க நிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டங்களை விரிவுபடுத்தி வருவதோடு, இந்தியாவின் டிஜிட்டல் இலக்குகளை அடைய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டமிடல் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
