மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி புதிய அரசை அமைத்துள்ளது. இந்த அதிரடித் தேர்தல் முடிவுகளுக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தி அலை எழுந்துள்ள சூழலில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 91 திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.
மாநிலத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு எடுத்துள்ள அதிரடி நிர்வாக நடவடிக்கைகளே இந்த கூட்டு ராஜினாமாவிற்கு முக்கியப் பின்னணியாகக் கூறப்படுகிறது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி நிதி முறைகேடுகள், தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்குச் சட்டவிரோதமாக டெண்டர்களை வாரி வழங்கியது மற்றும் போலி பில்கள் மூலம் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தது போன்ற புகார்கள் மீது புதிய அரசு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் கடந்த கால நிதி செயல்பாடுகள் குறித்து முழுமையான தணிக்கை நடத்தப் புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய அரசின் இந்த அதிரடி ஊழல் தடுப்பு விசாரணையில் தாங்கள் எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தினாலேயே திரிணாமுல் நகராட்சித் தலைவர்களும், கவுன்சிலர்களும் அவசர அவசரமாகத் தங்களது பதவிகளைத் துறந்து வருவதாக அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளப் பல கவுன்சிலர்கள் தற்போது ஆளும் கட்சியான பாஜக-வில் இணையவும் தயாராகி வருகின்றனர். ஒரே நேரத்தில் 91 கவுன்சிலர்கள் தங்களது பதவிகளைத் துறந்துள்ள இந்த திடீர் கூட்டு ராஜினாமாக்கள் காரணமாக, மேற்கு வங்கத்தின் பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நிர்வாகச் செயல்பாடுகள் தற்சமயம் முற்றிலும் முடங்கியுள்ளன.
