கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து: 4,200 கோழிக்குஞ்சுகள் கருகி சாம்பல்!

Estimated read time 0 min read

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் அவர் 4,200 கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார்.

சண்முகம் தினமும் கோழிப்பண்ணைக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று அவர் கோழிப்பண்ணைக்கு வந்துவிட்டு இரவு வரை அங்கேயே தங்கியிருந்தார். பின்னர் இரவு 11 மணியளவில் பண்ணையில் இருந்து புறப்பட்டு வீட்டுக்குச் சென்றார்.

இந்த நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவி எரிந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோழிப்பண்ணை உரிமையாளர் சண்முகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த சண்முகம் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தார். மேலும், வானூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோழிப்பண்ணையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும், இந்தத் தீ விபத்தில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 4,200 கோழிக்குஞ்சுகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர் சண்முகம் அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சண்முகம் கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கின் விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author