ஜூன் 3-ல் பள்ளிகள் திறப்பு… ஆனால் வாகனங்கள் ஓடாது? தனியார் பள்ளிகள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஜூன் மாதம் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற பெயரில் ஊழல் நடைபெறுவதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு மாவட்டத்திற்கு வெளியில் கூட செல்லாத பள்ளி வாகனங்களுக்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள ஜிபிஆர்எஸ் கருவியை 18,000 ரூபாய் கொடுத்து வாங்கி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அதிகாரிகள் சொல்லும் இடத்தில்தான் ஜிபிஆர்எஸ் கருவியை வாங்க வேண்டும். வேறு எங்கும் வாங்க கூடாது. ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்படவில்லை எனில், வாகனங்களை எஃப்.சி. செய்ய மறுக்கிறார்கள். இந்த ஜிபிஆர்எஸ் கருவியை அதிக விலை கொடுத்து வாங்குபோது, அதில் ஒரு பங்கு ஆர்.டி.ஓ.விற்கும் செல்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பள்ளி வாகனங்கள் எஃப்.சி. செய்ய ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளோம்.

ஆர்.டி.ஓ. அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால், ஜூன் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி வாகனங்களை இயக்காமல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.

எனவே, பள்ளி நிர்வாகிகள் யாரும் 18,000 ரூபாய் கொடுத்து ஜிபிஆர்எஸ் கருவியை பொருத்த வேண்டாம். அரசின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்.

பள்ளி நிர்வாகிகள், மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் ஆர்.டி.ஓ. அதிகாரிகளின் பெயர்களை, சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்போம்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author