இந்நோயை உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேரோடு பிடுங்கி எறிவதற்காகவும், போலியோ தடுப்பூசியின் அவசியத்தை உலகிற்கு உணர்த்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் தேதி உலக போலியோ தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
போலியோ தினத்தின் வரலாறு:
உலக போலியோ தினம் உருவாக்கப்பட்டதற்கான பின்னால் ஒரு மாபெரும் மருத்துவக் கண்டுபிடிப்பின் வரலாறு உள்ளது.
டாக்டர் ஜோனாஸ் சால்க் (Dr. Jonas Salk): 1950-களின் தொடக்கத்தில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த போலியோ நோய்க்கு முதன் முதலில் வெற்றிகரமாக தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோனாஸ் சால்க்.
ரோட்டரி இன்டர்நேஷனல் (Rotary International) அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றுடன் இணைந்து இந்நாளை விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
போலியோ நோய் என்றால் என்ன?
போலியோமைலிடிஸ் (Poliomyelitis) எனும் வைரஸால் இந்நோய் ஏற்படுகிறது. குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே இந்நோய் அதிகம் தாக்குகிறது.
• பரவும் முறை: சுகாதாரமற்ற நீர், உணவு மற்றும் மாசடைந்த சூழ்நிலைகள் மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவுகிறது.
• விளைவு: 200 பேரில் ஒருவருக்கு வைரஸ் நரம்பு மண்டலம் மற்றும் தண்டுவடத்தைத் தாக்கி, சில மணி நேரங்களுக்குள் நிரந்தரமான முடக்குவாதத்தை (Irreversible paralysis – பெரும்பாலும் கால்களில்) ஏற்படுத்துகிறது. சுவாசத் தசைகள் முடங்கும் போது மரணமும் ஏற்படலாம்.
தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசிகள்:
போலியோ நோயைக் குணப்படுத்த நேரடி மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால், தடுப்பூசிகள் மூலம் இந்நோய் நூறு சதவீதம் தடுக்க முடியும்.
• வாய்வழி போலியோ சொட்டு மருந்து (OPV – Oral Polio Vaccine): டாக்டர் ஆல்பர்ட் சாபின் (Dr. Albert Sabin) என்பவரால் உருவாக்கப்பட்ட இது, நாவில் சொட்டுகளாக வழங்கப்படுகிறது.
நோயெதிர்ப்புச் சக்தியை எளிமையாகவும் விரைவாகவும் சமூக அளவில் உருவாக்க இது உதவுகிறது.
• செயலிழக்கப்பட்ட போலியோ தடுப்பூசி (IPV – Inactivated Polio Vaccine): ஊசி மூலம் செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசி, உடலுக்குள் கூடுதல் பாதுகாப்பையும் நீண்டகால நோயெதிர்ப்புத் திறனையும் தருகிறது.
உலகளாவிய போலியோ ஒழிப்பு இயக்கம் :
1988-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப் ரோட்டரி இன்டர்நேஷனல், அமெரிக்க நோய் தடுப்பு மையம் (CDC) மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து Global Polio Eradication Initiative (GPEI) என்ற அமைப்பை உருவாக்கின.
•1988 ஆம் ஆண்டுகளில் உலக அளவில் நாளொன்றுக்கு ஆயிரம் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்ட நிலை இருந்தது.
• தீவிரமான விழிப்புணர்வு மற்றும் சொட்டு மருந்து முகாம்கள் மூலம், 99 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்தியாவின் வெற்றிப் பயணம்:
இந்தியாவில் போலியோ ஒழிப்பு என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.
1990-களின் மத்தியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஒரே நாளில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பிரம்மாண்ட முகாம்கள் நடத்தப்பட்டன.
சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கிராமப்புறங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் நேரில் சென்று சொட்டு மருந்து வழங்கினர்.
போலியோ அற்ற இந்தியா: 2011 ஜனவரிக்குப் பிறகு இந்தியாவில் புதிய போலியோ பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை ‘போலியோ அற்ற நாடு’ (என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது இருக்கும் சவால்கள்:
உலக அளவில் போலியோ கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், சில முக்கிய சவால்கள் இன்னும் எஞ்சியுள்ளன.
ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற ஒருசில எல்லைப் பகுதிகளில் இன்னமும் போலியோ வைரஸின் தாக்கம் முழுமையாக ஒழியவில்லை என்று ஆய்வு கூறுகிறது.
மேலும் உலகில் ஏதேனும் ஒரு மூலையில் போலியோ வைரஸ் எஞ்சியிருந்தாலும், அது சர்வதேசப் பயணங்கள் மூலம் உலக நாடுகளுக்கு மீண்டும் பரவும் ஆபத்து இருக்கிறது.
எனவே சில இடங்களில் நிலவும் வதந்திகள் மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக தடுப்பூசியைத் தவிர்க்கும் நிலையும் உள்ளது.
“ஒரு குழந்தைக்கும் போலியோ பாதிப்பு இருக்கக் கூடாது” என்பதே உலக போலியோ தினத்தின் முதன்மையான நோக்கம்.
போலியோ இல்லாத உலகத்தைப் படைப்பது சாத்தியமே என்பதை உலக நாடுகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன.
ஒவ்வொரு பெற்றொரும் தங்கள் குழந்தைகளுக்கு உரிய காலத்தில் போலியோ சொட்டு மருந்தையும் தடுப்பூசிகளையும் தவறாமல் வழங்குவதன் மூலமே, போலியோ அற்ற ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்க முடியும்.
– யாழினி சோமு
The post முடக்கிய நோயும் முறியடித்த மருத்துவமும்! appeared first on Thaaii Magazine.
