மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடியே பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை யார்தான் தவறவிடுவார்கள்? அப்படியொரு அனுபவத்தைப் பயணிகளுக்கு வழங்கும் வகையில், முழுக்க முழுக்கக் கண்ணாடியால் ஆன ‘விஸ்டாடோம்’ பெட்டியுடன் மதுரை – குருவாயூர் விரைவு ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது தெற்கு ரயில்வே. இந்தப் பயணத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்…

நீல வானம்… அதன் கீழே வானத்தைத் தொட்டுவிடத் துடிக்கும் மலைகள்… மலைச்சரிவுகளில் பச்சைப் பசேலெனப் பரவியிருக்கும் மரங்களும் செடி கொடிகளும்… உச்சியிலிருந்து வழிந்தோடும் அருவிகள்… பூமியில் நாகம்போல் வளைந்து நெளிந்து செல்லும் நீரோடைகள்…

இத்தனை அழகையும் ரசிக்க எத்தனை நாட்கள் கிடைத்தாலும் போதாது. ஆனால், இவற்றையெல்லாம் ஒரே ரயில் பயணத்தில் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது இந்த ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டி. மதுரையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயிலில் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிப் பெட்டி, தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் வழித்தடத்தில் இயற்கை ஆர்வலர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

மதுரையிலிருந்து சுமார் 518 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரயில், செங்கோட்டையைக் கடந்ததும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலுக்குள் நுழைகிறது.

சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இருட்டுக் குகை… தென்மலையின் 13 கண் ரயில் பாலம்… ஆங்காங்கே கொட்டும் சிறு அருவிகள்… ஓடைகளும் பசுமை போர்த்திய மலைச்சரிவுகளும்… இவற்றையெல்லாம் கண்ணாடி வழியே பார்த்து ரசித்தபடியே நாம் பயணிக்கலாம். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தப் பெட்டியில் 44 இருக்கைகள் உள்ளன. இயற்கைக் காட்சிகளைப் பல்வேறு கோணங்களில் ரசிக்கும் வகையில் இருக்கைகள் சுழலும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டியில் முதல்நாள் பயணத்திலேயே, பயணிகளிடம் உற்சாகம் தொற்றிக்கொண்டது. செல்போன்களில் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்தும், செல்ஃபி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி அவர்கள் ஆனந்தமாக பயணம் மேற்கொண்டனர்.

இந்தியாவிலேயே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விஸ்டாடோம்’ பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் ரயில்களில் இதுவும் ஒன்று. மலைப்பகுதியில் ரயில் இயக்கப்படுவதற்கேற்ப, ரயிலின் பின்புறத்திலும் ஓர் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து புறப்படும் ரயிலில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், குருவாயூரிலிருந்து புறப்படும் ரயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளிலும் இந்தப் பெட்டி இணைக்கப்படுகிறது.

முன்பதிவு தொடங்கியதுமே இருக்கைகள் நிரம்பி வரும் நிலையில், கட்டணத்தைக் குறைத்து தினசரி சேவையாக இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

இந்த ரயில் சேவை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்கிறார் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி. சுற்றுலா வளர்ந்தால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது.

இதோடு நின்றுவிடாமல், நெல்லை – கொல்லம் ரயிலையும் மீண்டும் தினசரி இயக்கி, அதிலும் ‘விஸ்டாடோம்’ பெட்டிகளை இணைக்க வேண்டும் என்கிறார் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா.

அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சேவைக்கு, பயணிகளிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு ரயில்வே நிர்வாகத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

இயற்கையை ரசித்தபடியான பயணம்… சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்பு… பயணிகளின் ஆதரவு… இவற்றுடன் ‘விஸ்டாடோம்’ பெட்டி தினசரி சேவையாக மாறுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Please follow and like us:

You May Also Like

More From Author