சென்னை : வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26) காலை ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அர்னாப் புயலால் தமிழகத்திற்கு நேரடியாக எந்தவித பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அர்னாப் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) தீவிரப் புயலாக மேலும் வலுவடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாக மாறி, வரும் அக்டோபர் 28-ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மணிக்கு 125 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் ஆந்திரக் கடலோர மாவட்டங்களுக்குப் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாகக் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுவதால், சென்னை உள்ளிட்ட 7 முக்கியத் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், பாம்பன் மற்றும் தென் மாவட்டமான தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. புயலின் நகர்வு காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் (Orange Alert), ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களுக்குக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் (Yellow Alert) இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
