புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
புகழ்பெற்ற அரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தின் போது பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை ஒட்டி அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
இதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே எள், மற்றும் நெய்விளக்கு ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேப்போல சென்னை திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் பக்தர்கள் கோவிந்தா…கோவிந்தா என்ற நாமத்துடன் சுவாமியை தரிசித்தனர். பின்னர் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் இனிப்பு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில், புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டத்தின் தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கூட்டம் அதிகாரித்து காணப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
