சென்னை : தமிழகத்தில் நிலவும் மாறிவரும் வானிலைச் சூழல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வரும் நவம்பர் 12-ஆம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 13-ஆம் தேதியன்று கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், பிற பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
நவம்பர் 14-ஆம் தேதியன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
