அசாம் மாநிலத்தில் பேருந்தும், நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோலாகாட் மாவட்டம் டெர்கான் அருகே தேசிய நெடுஞ்சாலையில், அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காமர்பந்தா பகுதியில் இருந்து திலிங்கா கோயிலுக்கு 49 பேருடன் சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் விபத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
