நவ.20-ல் முதலமைச்சர் விஜய் திருச்சி பயணம்: ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனைக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்..!!

Estimated read time 1 min read

நவ.20-ஆம் தேதி, காலை 09.00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய், திருச்சிக்கு செல்கிறார். காலை 10.00 மணிக்கு திருச்சி விமான நிலையத்தைச் சென்றடையும் முதலமைச்சர் விஜய், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புத்தூர் பகுதிக்கு செல்கிறார். முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கும் முதலமைச்சர் விஜய், மருத்துவமனையை பார்வையிடுகிறார்.

அதைத் தொடர்ந்து, அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்திற்கு செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இவ்விழாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்றத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.

பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் விஜய், அன்று பிற்பகலிலே மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்சி விமான நிலையத்திலிருந்து புத்தூர் அரசு மருத்துவமனை வரை உள்ள முக்கிய சாலைகளின் நடுவே அமைந்துள்ள தடுப்பு சுவர்களின் இருபுறமும் வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சாலைகளின் இருபுறமும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையின் முகப்பு மற்றும் சுற்றுச்சுவர்களுக்குப் புதுப்பொலிவூட்டும் வகையில் வர்ணம் பூசும் பணிகளும், மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author