அமெரிக்க வர்த்தகத்திற்குச் சுமையாகவும் தடையாகவும் இருக்கும் இந்தியாவின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்குப் பதிலடியாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பதாக அமெரிக்க அரசு புதன்கிழமை (நவம்பர் 25, 2026) அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், 14 பொருளாதார நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளில் வியட்நாமிற்கு (35%) அடுத்தபடியாக இந்தியாவுக்கு இரண்டாவது அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை (Agreement on Reciprocal Trade) எட்டினால், இந்தியா மீதான இந்த வரி 17 விழுக்காடாகக் குறையக்கூடும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த 25 விழுக்காடு வரியானது ஏற்கனவே இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் கழித்து (Net of existing tariffs) கணக்கிடப்படும் என்றும், அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 விழுக்காடு வரியுடன் இது கூடுதலாகச் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏற்கனவே உள்ள பிற வரிகளைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய வரிகளை மாற்றியமைப்பதா என்பது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகமே முடிவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்துப் பதிலளித்துள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், எந்தத் துறையிலும் இந்தியா கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறனைக் (Structural Excess Capacity) கொண்டிருக்கவில்லை என்பதை விசாரணையின் போதே தெளிவுபடுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2, 2026 அன்று அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 7 அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, இந்தியா – அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் இந்தியா உள்ளிட்ட வர்த்தக கூட்டாளிகள் மீது இரண்டு தனித்தனி விசாரணைகளை அமெரிக்கா தொடங்கியது. இதில் கட்டாய உழைப்பு (Forced Labour) தொடர்பான முதல் விசாரணையின் முடிவில் இந்தியாவுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. தற்போது அதிகப்படியான உற்பத்தித் திறன் தொடர்பான இரண்டாவது விசாரணையின் விளைவாக இந்த 25 விழுக்காடு வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அனைத்து நாடுகளின் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிக்கு அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள 50 விழுக்காடு வரியுடன் இந்தப் புதிய வரி சேர்க்கப்படாது. ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 விழுக்காடு வரை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கொள்கைகள் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் நியாயமற்ற போட்டியை உருவாக்கி, அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 விழுக்காடு வரியானது ஜப்பான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, தைவான், ஐரோப்பிய ஒன்றியம் (தலா 15%), இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து (தலா 18%) மற்றும் வங்கதேசம், கம்போடியா, சீனா, சிங்கப்பூர் (தலா 20% வரை) ஆகிய நாடுகளை விட அதிகமாகும். 35 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள வியட்நாம் கூட அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அதன் வரி 20 விழுக்காடாகக் குறையும் சூழல் உள்ளது. அதேபோல், இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கும் இந்தியா – அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறி, வரி விகிதம் 17 விழுக்காடாகக் குறைக்கப்பட்டால், அது சர்வதேசப் போட்டியாளர்களை விட இந்தியாவுக்குச் சாதகமான வர்த்தக வாய்ப்பை வழங்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
