இம்மாதம் 17ம் தேதி முதல் தொகுதி வாரியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கூட்டணிகள், வியூகங்கள், பிரச்சாரங்கள் – இவை அனைத்தும் வேகமாக முன்னேறி வருகின்றன. எந்த புதிய கட்சிகளும் சேராத நிலையிலும் வலுவான வெற்றிக் கூட்டணியாக திகழும் திமுக கூட்டணி, தேர்தல் முன்னெடுப்புகளை படுவேகமாக நகர்த்தி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கருதும் எதிர் தரப்பான அதிமுக, பாஜக உடன் மட்டும் கூட்டணியை திடீரென உறுதி செய்து வைத்திருக்கிறது. மற்றபடி கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதிமுகவின் கூட்டணியில் தேமுதிக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினாலும், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பிடிகொடுத்து பேசவில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யவில்லை. ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாநாட்டில்தான் தெளிவுபடுத்தப்படும் என அதிரடியாக கூறிவிட்டார். இதேபோல்தான் பாமகவும் நாங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.

ஈபிஎஸ், அன்புமணி, பிரேமலதாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆக. 17ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார். நேரடியாக மக்களை களத்தில் சந்தித்து பாஜகவின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துரைக்கவுள்ளார்.
