தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

– கவிஞர் இரா. இரவி

*****

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார்
தமிழ்க்கனல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழர்கள் தான் தமிழை மதிக்கவில்லை இன்று
தமிழ்வழிக் கல்வியை புறக்கணிக்கும் நிலை

ஆங்கிலமோகம் கொண்டு அலைகின்றான்
ஆங்கிலவழிக்கல்வியை பெரிதும் விரும்புகின்றனர்

தமிழைத் தமிழாகப் பேசுவதே இல்லை
தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுகின்றனர்

தமிழன் அங்காடிகளில் தமிழ்எழுத்து இல்லை
தமிழன் நாவில் நல்லதமிழ் பேசுவதே இல்லை

அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி
ஆரம்பக்கல்வி தமிழில் இருப்பதுதான் சிறப்பு

தொலைக்காட்சிகளோ தொல்லைக்காட்சிகளானது
தொலைக்காட்சிகளிலும் தமிங்கிலமே பேசுகின்றனர்

தமிழர்களுக்கு தமிழ்ப்பற்று தானாக வரவேண்டும்
தமிழ் உலகின் முதல்மொழி என்பதை உணர வேண்டும்

பலநாடுகளில் ஒலிக்கும் மொழி நம் தமிழ்
பன்னாட்டின் ஆட்சிமொழி பண்டைத் தமிழ்

உலகம் அறிந்துள்ளது தமிழின் தொன்மையை
உள்ளூர் தமிழர்கள் அறியாமல் உள்ளனர்

இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்

நேற்று முளைத்த காளான் தான் ஆங்கிலமொழி
என்று பிறந்தது தெரியாத தொன்மை தமிழ்மொழி

Please follow and like us:

You May Also Like

More From Author