கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடக்கத்தில் தீவிரமாக மழை பெய்தாலும் அதன் பிறகு மழை குறைந்து அடிக்கடி மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூன் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். நாளை நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.