இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய குக்கி, மெய்தேய் இனத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது கடந்த சில மாதங்களில் சற்று அமைதியாக இருந்த நிலையில் , தற்போது கடந்த ஒரு வாரமாக மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான சூழலில், மணிப்பூர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் மாணவர் அமைப்பினர் தலைநகர் இம்பால் சாலையில் நீண்ட பேரணி ஒன்றை நடத்தினர். விமான நிலைய சாலை அருகே நடந்த இந்த பேரணி நடைபெற்று வந்தபோது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கும் மாண்வர்கள் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து மணிப்பூர் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பேரணியில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.