மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்- மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Estimated read time 1 min read

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம், மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும்படி இலங்கை அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் புதிய அதிபராக சிங்கள பேரினவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அநுரா குமார திசநாயக பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4-ஆம் தேதி இலங்கை செல்கிறார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இலங்கைப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்கு நிகழ்த்தப்பட்ட கொடிய போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தினாலும் கூட எந்தப் பயனும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

13-ஆம் அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகாரப் பரவல் என்பது மிக மிக குறைவானது தான் என்றாலும் கூட, அதுவும் கூட 35 ஆண்டுகளாக சாத்தியமாகவில்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை ஆட்சி செய்த கட்சிகள் அல்லாத புதிய கட்சியைச் சேர்ந்த ஒருவர் அதிபராகியுள்ள நிலையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், வடகிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், பிரிக்கப்பட்ட வடக்கும் மற்றும் கிழக்கு மாநிலங்களை இணைந்து தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்றும்படி இலங்கை அதிபரை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும் இலங்கை அதிபரை வலியுறுத்த வேண்டுமென்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author