தருமபுரி கடையடைப்பு முழு வெற்றி- ராமதாஸ்

Estimated read time 1 min read

தருமபுரி நகரத்தில் தொடங்கி, கிராமம் வரை அனைத்து இடங்களிலும் 100 விழுக்காடு கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததாகவும், கடையடைப்பு முழு வெற்றி என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வறண்டு கிடக்கும் தருமபுரி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கான தருமபுரி & காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அரை நாள் கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. தருமபுரி நகரத்தில் தொடங்கி, கிராமம் வரை அனைத்து இடங்களிலும் 100 விழுக்காடு கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தருமபுரி மாவட்டம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் முதன்மைத் தொழிலான வேளாண்மைக்கு தண்ணீர் இல்லாததால் லட்சக்கணக்கான மக்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் வேலை தேடி செல்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் தருமபுரி & காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு ஏற்காத நிலையில் தான் அரை நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்தது. திட்டத்தின் தேவையையும், போராட்டத்தின் நியாயத்தையும் புரிந்து கொண்ட வணிகர்கள் கடையடைப்புக்கு 100% ஆதரவு அளித்துள்ளனர்.

போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வணிகர்கள், பொதுமக்கள், சமூகநல அமைப்புகள் உள்ளிட்டோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடையடைப்புப் போராட்டத்தை வெற்றியாக்க கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்து தருமபுரி & காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author