பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தினம்தோறும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை ஆகிய இரண்டு பிரதான வழிகள் உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகள் ,முதியவர்கள் ஆகியோர் மலைக்கோவிலுக்கு செல்ல ஏதுவாக ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.
ரோப் கார் மற்றும் இழுவை ரயில் மூலமாக மலைக் கோயிலுக்கு செல்லும்போது இயற்கையை ரசித்தபடி செல்லலாம். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த சூழலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு சரிபார்க்கப்படும்.
அந்தவகையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகையால் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின் இழுவை ரயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோயில் சென்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.