மனதில் ஹைக்கூ

Estimated read time 1 min read

Web team

IMG-20241104-WA0039.jpg

மனதில் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் :
சாகித்ய அகதெமி விருது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி !
மேலாண் மறைநாடு-626 127. விருதுநகர் மாவட்டம்,
செல் : 99426 10700.
******
நாள் : 12-11-2010
மனதில் ஹைக்கூ என்ற கவிதை நூலை வாசித்து விட்டேன்.
திருக்குறள் மாதிரியான தலைப்பு அத்தியாயங்களுக்குள் சில சில ஹைக்கூ கவிதைகள். வித்தியாசமான அடுக்குமுறைமை.
கோடாரியை
கூர்தீட்டுகையில்
வருந்தியது கைப்பிடி
மேடுகளைத் தகர்த்து
பள்ளம் நிரப்பும் சமத்துவம்
பொதுவுடைமை
வீட்டைப் பிடித்த நோய்
பேருந்திற்கும் தொற்றியது
தொல்லைக்காட்சி.
உங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களையே பாடுபொரு-ளாக்குகிற ஹைக்கூகளில் ஒரு சமுதாயப் பார்வையையும் முன் வைக்கிறீர்கள்.
ஹைக்கூ பற்றியே ஹைக்கூவா? ஆச்சரியம் தருகிற முயற்சி.

கணினி யுகத்தின்
கற்கண்டு
ஹைக்கூ.

மூன்று வரி
முத்தாய்ப்பு
ஹைக்கூ.

இரண்டுமே சுவையாக இருக்கிறது. ஹைக்கூ, கற்கண்டா … மூலிகையா? சுவை மட்டும் தருமா? நலமும் தருமா?

பொக்ரான் சோதனை
சந்திராயன் பெருமை
தீண்டாமை சிறுமை

உண்ணும் உணவிலும்
உடுக்கும் உடையிலும்
காட்டுவாயா தீண்டாமை!

சாட்டைச் சுழற்சியாக கவிதைகள். ‘வல்லரசு’ பெருமை மயக்கத்தில் இருக்கிற இந்தியாவின் சமூகப் பண்ணை சரியாகவே சுட்டிக் காட்டுகிறீர்கள்.

அரசாங்கம் நடத்தும்
அவமானச் சின்னம்
டாஸ்மாக் !

விதவைகளின் எண்ணிக்கை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக் !

நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல், உள்மன உலக தரிசனங்களில் ஒதுங்கி ஒதுங்கி மிதக்கிற கவிதைகளுக்கு மத்தியில் வீதிப்புழுதியை உழுகிற உங்கள் கவிதைகள்.

சகாப்தம்
சாகாத வரம்
காமராஜர் !

நல்ல வார்த்தைச் சித்திரம்.

விவேக வரிகளால்
வீரம் விதைத்தவர் !
மகாகவி !

யுகம் கடந்து வாழும்
யுக கவி
மகாகவி !

மகாகவி பாரதிக்கு மிகப் பெரிய வணக்கமும், ராஜமரியாதையும் செய்கிற கவிதைகள்.

பாமரனுக்கும் புரிந்திட
பா படித்தவர்
மகாகவி !

இக்கவிதை தான் பாரதிக்கு மணிமகுடம் சூட்டி மகிழ்கிறது.

சங்க இலக்கியத்தைச்
சாமானியருக்கு சமர்ப்பித்தவர்
கவியரசு !

கண்ணதாசனுக்கு சிறந்த பொன்னாடைகளை போர்த்துகிறீர்கள்.

புரட்சிப் பாவேந்தருக்கு உரிய மரியாதை தருகிறீர்கள்.
மின்தடையைக் கூட விட்டு விடாமல் ஹைக்கூ சாட்டையால் விளாசுகிறீர்கள்.

பெரிய நிறுவனங்களின்
சின்னப்புத்தி
காய்கறி வியாபாரம்.

சரியான அரசியல் விமர்சனம். சமகாலக் கொடுமைகளையும் எதிர்த்து சமர் செய்கிற தங்கள் கவிதைகளின் துணிச்சலைப் பாராட்டலாம்.

வழிவகுத்தன
புதிய கலவரத்திற்கு
புதிய சிலைகள்.

பலர் தொட்ட பழைய சிந்தனையாக இருந்தாலும், தமிழ்நாட்டு ரணங்களில் ஒன்றான சாதிக் கலவரத்தை, சிலை நிறுவுவதை எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சொல்லலாம்.

வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பெருகும் மன நோயாளிகள்.

பட்டாசு, தேர்தல், செல்பேசி என்று சகலமும் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் சமுதாயப் பார்வை, தத்துவ நோக்கு, மனத் துணிவு, அரசியல் பார்வை எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கிறது, பாராட்டுக்குரிய முற்போக்கானதாக இருக்கிறது.

மக்கள் நலனை மனதில் வைத்து, சமுதாய நிகழ்வுகளை சாடுகிற, விமர்சிக்கிற, பாராட்டுகிற தங்கள் கொள்கை பாங்கு மிகமிகச் சரியானது. நுட்பமானது, முற்போக்கானது.

ஆனால், ஒரு சின்ன விமர்சனம், அதை முன் வைத்தேயாக வேண்டும்.
செறிவும், அடர்த்தியும், சொற்சிக்கனமும், கவித்துவ கச்சிதமும் இன்னும் நிறைய தேவைப்படுகின்றன.
சிந்தனைத் தெறிப்புகள் இருக்கிற அளவுக்கு, கவிதைத் தெறிப்புகள் இல்லையோ என்ற மெல்லிய விமர்சனத்தை சொல்லியே ஆக வேண்டும்.
பயணம் முக்கியம், வாகனம் முக்கியம், வாகனம் தான் பயணத்தை கூடுதலாக வெற்றிப்படுத்தும்.
உள்ளடக்கம் என்கிற உங்கள் சமுதாயக் கொள்கைகளை கவித்துவ வடிவம் தான் சுமந்து செல்கிறது. அதன் செறிவும், சொற் சிக்கனமும், கச்சித அழகும் பரந்து விரிந்த வாசகத் தளத்துக்கு உங்கள் சமுதாயக் கொள்கை கொண்டு செல்லும். கவித்துவ அழகும் மிகமிக முக்கியும்.
“எளிய பதம்” கோரிய மகாகவி, “காவியச் சுவை”யையும் வற்புறுத்துகிறான்.
தங்கள் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன.
செந்தமிழும் நாப்பழக்கம், கவிதையும் பேனாப் பழக்கம், எழுத, எழுத கூர்மை பெறும்.
உங்கள் சமுதாயக் கொள்கையில் நேர்மையுடன் உறுதியாக இயங்குங்கள். தொடர்ந்து, விடாமல் கவிதை முயற்சிகளில் பயணப்படுங்கள்.
கடலுக்குள் தொடர்ந்து மூழ்குகிறவன் கூடை நிறைய சிப்பிகள் அள்ளி வருவான். தொடர்ந்து மீண்டும் மீண்டும் மூழ்குகிற போது, முத்துக்களையும் அள்ளி வருவான்.
விருட்சத்தை மறைத்து வைத்திருக்கிற சிறிய செடியைப் போல, மிகப்பெரிய கவிஞரை மறைத்து வைத்திருக்கின்றன உங்களது சின்னஞ்சிறு ஹைக்கூ கவிதைகள்.
வாழ்த்துகிறேன், மனசாரப் பாராட்டுகிறேன்.
நூலின் வடிவமைப்பு மிக மிக நேர்த்தியாக இருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author