Web team
வாழ்க்கை ஓர் அதிசயம் !
நூல் ஆசிரியர் : அமுதா பாலகிருஷ்ணன் ! amuthabk74@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
அமுதா பதிப்பகம், A 90, அண்ணா நகர், சென்னை – 600 102.
பேச : 73 73 77 99 99 விலை : ரூ. 100
*****
‘வாழ்க்கை ஓர் அதிசயம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நூலாசிரியர் திரு. அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் உள்ள முன்னணி தொழில் அதிபர்.கல்விப்பணிகள் செய்பவர், இவருக்கு எப்படி நூல் எழுதிட நேரம் கிடைக்கின்றது என்ற வியப்பு எனக்கு தோன்றும். 20 நூல்கள் எழுதி வெளியிட்டு விட்டார்கள். சென்னையில் நடக்கும் எல்லா இலக்கிய விழாக்களிலும் இவரைப் பார்க்கலாம். பங்கேற்பாளராகவோ, பார்வையாளராகவோ எப்படியும் அரங்கத்தில் இருப்பார். கற்றலின் கேட்டல் நன்று என்பதற்கு இலக்கணமாக பல்வேறு இலக்கிய கூட்டங்களை செவிமடுத்து கேட்டு, எழுத்தாளராக வலம் வருகிறார். பாராட்டுக்கள்.
தமிழத்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரையின் தலைப்பு ‘இன்முகச் செல்வியரின் அற்புத நூல்’ மிக பொருத்தமான தலைப்பு. நூலாசிரியர் திரு. அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் முகத்தில் எப்போதும் புன்னகையை அணிந்து இருப்பவர். பச்சையப்பன் கல்லூரி மேனாள் பேராசிரியர் சா. வளவன் அவர்களின் அணிந்துரையில் ‘அமுதா பாலகிருஷ்ணன் என்னும் வியப்பே வாழி’ என்னைப் போலவே அவரும் வியந்து அவர்களின் மதிப்புரையும் மிக நன்று.
21 தலைப்புகளில் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டிய அவசியத்தை, அதிசயத்தை பல்வேறு மேற்கொள்களுடன், உவமைகளுடன் உணர்த்தி உள்ளார். எந்த ஒரு செயலையும் கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு செய் என்பார்கள். அதுபோல, வாழ்வை விரும்பி இன்புற்று வாழ வழி சொல்லும் நல்ல நூல் இந்த நூல். நூலாசிரியர் அவரது தந்தைக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. உலகப்பொதுமறையான ஒப்பற்ற திருக்குறள்களை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி உள்ளார். நூலாசிரியரின் திருக்குறள் ஈடுபாட்டை உணர் முடிந்தது.
பேசுவது போன்று மிக இயல்பான நடை. படித்தவர், பாமரர் என்ற வேறுபாடு இன்றி படிக்கும் அனைவருக்கும் எளிதில் விளங்கிடும் எளிமையான கருத்துக்கள். இனிமையான கருத்துக்கள் நூலில் உள்ளன. ஈடு, ஈடு இணை, ஈடுபடு, ஈடுபாடு இப்படி சிறிய சொற்களை கட்டுரையின் தலைப்பாக இட்டு சொல் விளையாட்டு விளையாடி கட்டுரைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
ஈடு இணை என்ற கட்டுரையில் உள்ள வரிகள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு.
ஜப்பானில் பள்ளிக்கூட வகுப்பறையில் ஒரு வாசகம்
உன்னால் முடியாதென்றால் ஜப்பானால் முடியாது
ஜப்பானால் முடியாதென்றால் உலகத்தால் முடியாது.
முயற்சி செய்தால் உன்னால் எதுவும் முடியும் என்பதை தன்னம்பிக்கை தரும் விதமாக ஜப்பானில் உள்ள பள்ளி வாசகத்தை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை மிக நன்று.
வாழ்க்கையின் மீது மனிதனுக்கு பற்று வர வேண்டும். “வெந்த சோறு தின்று விதி வந்தால் சாவேன்” என்று சொல்லி இயந்திரமாக வாழ்வது வாழ்க்கையன்று. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க வேண்டும். நம்மை நாமே நேசிக்க வேண்டும். வாழ்வின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்திடும் நூல்.
கட்டுரைகளில், கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் நன்கு வலியுறுத்தி உள்ளார்.
“வேண்டாத விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தையும், காலத்தையும் வீணாக்கக் கூடாது, பெயரையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது”.
உண்மை தான் பல பெரிய மனிதர்கள் கூட சில சமயங்களில் வேண்டாத விஷயங்களில் ஈடுபட்டு பெயரை கெடுத்துக் கொள்ளும் நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.
பத்மஸ்ரீ கமலஹாசன் எழுதிய வைர வரிகளோடு கட்டுரையைத் தொடங்கி, இந்த வரிகளை மனைவியைப் பார்த்து கணவனும், கணவனைப் பார்த்து மனைவியும் சொன்னால் வாழ்க்கை இனிக்க்கும் என்கிறார். உண்மை தான் நீங்களும் சொல்லிப் பாருங்கள்.
“உன்னை விட இந்த உலகத்தில்
உசந்தவர் யாருமில்ல”
இதைப் படித்தவுடன் அவர் சொன்ன நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் நடிக்கப் போகிறேன் என்று அவர் அம்மாவிடம் சொன்னபோது .அவர்கள் சொன்னார்களாம் . “நடிக்கப் போகிறாயோ ? அல்லது கழிவறை சுத்தம் செய்யப் போகிறாயோ ? கமலஹாசன் அளவிற்கு யாரும் கழிவறை சுத்தம் செய்ய இயலாது என்ற அளவிற்கு பெயர் எடுக்க வேண்டும்”. என்றார்களாம் .அவரும் அவர் அளவிற்கு யாரும் நடிக்க முடியாது என்ற பெயர் எடுத்து விட்டார் .காரணம் ஈடுபாடு .
நூலாசிரியர் திரு. அமுதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு திரைப்படப் பாடலை உற்றுகேட்கும் பழக்கம் உள்ளது என்பதை உணர முடிகின்றது.
“கவலைப்படாதே சகோதரா, கவலைப்படாதே” என்ற தேவா பாடிய பாடலையும் மேற்கோள் காட்டி கவலை வேண்டாம் என்று நன்கு உணர்த்தி உள்ளார்.
அன்றைய பாடல்களான பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலையும் மேற்கோள் காட்டி உள்ளார். எப்போது தூங்க வேண்டுமோ அப்போது தான் தூங்க வேண்டும். எப்போதும் தூங்கினால் வாழ்க்கை தூங்கி விடும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
தூங்காதே தம்பி தூங்காதே – நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார்.
மதுரையில் நியூ காலேஜ் ஹவுஸ் உரிமையாளர் தொழில் அதிபர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார். ஆனால் அவரிடம் திருக்குறள் மேற்கோள் காட்டாமல் பேசுங்கள் என்றால் தோற்று விடுவார் என்று வேடிக்கையாக சொல்வேன். அதுபோல இந்த நூலாசிரியர் திரு. அமுதா பாலகிருஷ்ணன் அவர்களிடம் திருக்குறள் எழுதுங்கள் என்றால் தோற்று விடுவார். அந்த அளவிற்கு திருக்குறளை ஆழ்ந்து படித்து ஈடுபாட்டுடன் உள்ளார்.
நகைச்சுவை ததும்பும் விஷயமும் நூலில் உள்ளது.
ஒரு நாள் அவரது உறவினர் (வயதானவர் தான்) இறந்து விட, ஊர்வலப் பல்லக்கில் தூக்கு வைப்பதற்கு இவரும் ஒரு பக்கம் தோள் கொடுத்த்து தூக்கும் போது, இவரது செல்போன் அழைப்பொலி “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” என ஒலித்தது. மூட நம்பிக்கை வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.
ஏளனம் செய்தவரை வெறுப்பதை விட நன்றாக உயர்ந்து காட்டுவதே மிகச்சிறந்த பழிவாங்கல்! திருக்குறளையும் மேற்கோள் காட்டி, இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்க்கையை ரசித்து, ருசித்து, மகிழ்ந்து வாழ்ந்திட வழி சொல்லும் நூல். வெற்றி பெற்ற மனிதர் எழுதியுள்ள வெற்றிக்கு வழி சொல்லும் நூல். நூலாசிரியர் திரு. அமுதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
வெற்றிகரமாக தொழில் புரிவதோடு நின்று விடாமல் இலக்கியத்திலும் ஈடுபடுவதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம் அதை எல்லோரும் உணர வேண்டும் .இலக்கியம் இதயத்தை இதமாக்கும் .தொடர்ந்து எழுதுங்கள் நூல் வெளியிடுங்கள் .பாராட்டுக்கள் .
.