மரங்களின் தாய் பத்மஸ்ரீ விருது பெற்ற துளசி கவுடா நேற்று மாலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக காடுகளை பாதுகாக்கும் பணியில் துளசி ஈடுபட்டார்.
இதுவரை துளசி கவுடா முப்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக துளசி கவுடா தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். இந்த நிலையில் துளசி கவுடாவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, துளசி கவுடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.
துளசி கவுடா கர்நாடகத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பத்ம விருது பெற்றவர். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், இயற்கையை வளர்ப்பதற்கும், நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் துளசி கவுடா. அவர் ஒரு வழிகாட்டியாக இருந்தார். அவரது பணிகள் வரும் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.