திமுக தலைமையிலான கூட்டணி, கொள்கை கூட்டணி மட்டுமல்லாமல் நிரந்தர கூட்டணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோழர் நல்லக்கண்ணுவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்கி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் நான் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.
மேலும் பொதுவுடமை இயக்கம், நல்லக்கண்ணு அவர்களுக்கும் நூற்றாண்டு கொண்டாட்டம் இப்படி யாருக்கும் அமையாது. இந்த மேடையில் நான் வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெறவே வந்து இருக்கிறேன். மேலும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் பல்வேறு திட்டத்திற்கு துணையாக இருப்பவர் நல்லக்கண்ணு, எப்போதும் சிந்தித்து அவரின் செயல்களை வெளிப்படுத்துபவர். அவர் இன்னும் தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 இடங்கள் அல்ல, அதையும் தாண்டி இந்த கூட்டணி வெற்றி பெறும். திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி ஏழு ஆண்டுகளுக்கு மேல் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. இது கொள்கை கூட்டணி மட்டுமில்ல, நிரந்தர கூட்டணியாக நாங்கள் இருக்கிறோம்” என்றார்.