தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு தேவாலயங்கள் முழுவதும் மின் விளக்குக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
குறிப்பாக, தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்ட பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நெற்றி இரவு கிறிஸ்துமஸ் கேரல் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
கேரல் ஊர்வலத்தின் போது, இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவருமே ஆடி பாடி கொண்டாடினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும், தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கேரல் ஊர்வலம் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
சென்னை பெசன்ட் நகரில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளித்தது. கோவையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, ரத்தனபுரி சின்னப்பர் தேவாலயத்தில் மும்மதத்தைச் சார்ந்தவர்கள் கேக் வெட்டி, மாறிமாறி இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.