கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயணித்து இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி விடுமுறை கால சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 25, 27, 29 மற்றும் 31ஆகிய 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
அதேபோல உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு டிசம்பர் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறப்பட்ட சிறப்பு மலை ரயிலில் முன்பதிவு செய்திருந்த 180 பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.