புதுச்சேரியில் உள்ள மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை குடியரசுத் துணைத் தலைவர் மேற்கொண்டுள்ளார்.
முதல் நாளில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற இந்திய சட்டமன்ற அமைப்புகளின், தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டின் நிறைவு விழாவில், குடியரசுத் துணைத்தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர், குடியரசுத் துணைத்தலைவர் புதுச்சேரிக்கு சென்றார். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவைகள் பறக்க தடை விதிக்கப்பட்டது. பிற்பகலில், குடியரசுத் துணைத்தலைவர் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் “வளர்ச்சியடைந்த பாரதம் 2047” என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.
இந்நிலையில், இன்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் புதுச்சேரியில் உள்ள மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.