திருவண்ணாமலை: நாளை மறுநாள் (டிசம்பர் 13) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
இந்த நிலையில், மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று திருவண்ணாமலையின் தீப மலை 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் இறந்த சோக சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது.
இதனால், இந்த வருடம் தீப திருவிழா வழக்கம் போல நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. பின்னர், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை – கிரிவலம் மலையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர் உள்ளிட்ட 8 பேர் குழுவினர் மலை மீது ஏறிச் சென்று ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வறிக்கை கிடைத்தவுடன், நேற்றைய தினம் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ” டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர். பரணி தீபத்துக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்த நிலையில், நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.