கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர்.
இந்நிலையில் , உத்தரப்பிரதேச அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக குறைந்த பட்சம் தினமும் 2 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்வதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதில், கடந்த 23 ஆம் தேதி, அதாவது பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்துவிடப்பட்ட முதல்நாளில் 5 லட்சம் பேரும், 24ஆம் தேதி 2.5 லட்சமும், 25 ஆம் தேதி 2லட்சம் பேரும், குடியரசு தினமான 26ஆம் தேதி 3.5 லட்சம் பேரும், 27ஆம் தேதி 2.5 லட்சம் பேரும், 28ஆம் தேதி 3.5 லட்சம் பேரும் அயோத்தி ராமரை தரிசனம் செய்துள்ளனர் என உத்தரப்பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு, அயோத்திக்குச் செல்வதற்காக, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ரயில்கள் வருவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளது. அதேபோல், விமான நிலையமும் தற்போது இயங்கி வருகிறது.
அதேபோல், பக்தர்களின் காணிக்கையும் கோடிக்கணக்கில், குழந்தை ராமருக்கு குவிந்து வருகிறது. ஆனால், எவ்வளவு காணிக்கை என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.
இருப்பினும், இந்தியாவிலேயே அதிகளவு காணிக்கை குவியும் திருப்பதி கோவிலை மிஞ்சும் அளவில், ரொக்கும் பரிசுப் பொருட்களும் குவிந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.