பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்மங்கலம் அருகே நெரூரில் ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் நடக்கும் நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனிடையே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தனிநீதிபதி அனுமதியளித்து இருந்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், எச்சில் இலை மீது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதியளித்து தனிநீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. எச்சில் இலையில் உருளுவது, சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.