ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் பொது வினியோக கடைகளுக்கு வழங்குவதற்கு போலி நெல் கொள்முதல் செய்துள்ளார். இதுகுறித்து, கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த புகாரில், 32.44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அதில் 101 அசையா சொத்துகள் மற்றும் பல வங்கி கணக்குகளில் பணம் இருப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 12-ஆம் தேதி அரசு தரப்பு புகாரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேற்கு வங்க காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட, பல்வேறு எப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. இதில் பல்வேறு அங்கீகரிக்கப்படாத தனியார் நபர்களிடம் போலியாக நெல் கொள்முதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
என்பிஜி ரைஸ் மில் பிரைவேட் லிமிடேட் பிடிஎஸ் வினியோகஸ்தர்கள், பிடிஎஸ் டீலர்கள் மற்றும் பிற நபர்களுடன் கூட்டு சேர்ந்து பொது வினியோக அமைப்புக்கு வழங்க வேண்டிய மொத்த கோதுமை மாவில் 25.55 சதவீதம் முறைகேடு செய்துள்ளனர்.
மேலும், போலி விவசாயிகளின் பெயரில் நெல் கொள்முதல் செய்து மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில், என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் மிகப் பெரிய முறைகேடு செய்துள்ளார். இதன் மூலம் பல இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார்.
விசாரணையின் போது, முறைகேடு செய்து சேர்த்த 101 அசையா சொத்துக்கள் மற்றும் ரூபாய் 2 கோடியே 89 இலட்சம் வங்கி இருப்பு ஆகியவை டிசம்பர் 11-ஆம் தேதி தற்காலிகமாக இணைக்கப்பட்டது.
முன்னதாக, குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளில் இருந்த ரூபாய் 16 கோடியே 87 இலட்சம் முடக்கப்பட்டது. ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் பிஎம்எல்ஏ 2002 பிரிவு 19-இன் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.