வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி மாவட்டம், சேவாபுரி தொகுதியில் உள்ள பனௌலி கிராமத்தில் நடைபெறும் கூட்டத்தில் ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின் 20வது தவணை தொகையை உத்தியோகபூர்வமாக வெளியிட உள்ளார்.
இதன் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 9.70 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் தலா ₹2,000 வீதம், மொத்தம் ₹20,500 கோடி தொகை நேரடியாக வைப்பாக வழங்கப்படவுள்ளது.
இதனுடன், ரூ.2,183.45 கோடி மதிப்புள்ள 52 மேம்பாட்டு திட்டங்களும் தொடங்கப்படுகின்றன. இதில், ₹881.56 கோடியில் நிலத்தடியில் மின்கம்பிகள் பதிக்கப்படும் திட்டத்திற்கும், சந்த்பூரை படோஹியுடன் இணைக்கும் ₹266 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலைக்குமான திட்டத் தொடக்கமும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், பிந்த்ராவில் ₹55 கோடி செலவில் கட்டப்படும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கும், டால்மண்டி சாலை அகலப்படுத்தும் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த உதவித் தொகையை பெற விவசாயிகள் தங்களது வங்கி கணக்குகளில் KYC புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை முன்பே சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் 17வது தவணை வெளியிடப்பட்ட நிலையில், இந்த 20வது தவணையும் அதே இடத்தில், பிரதமரால் நேரில் வழங்கப்படுவதால், இது விவசாயிகளுக்கான தொடரும் நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.