கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை , அவ்வப்போது இலைங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இலங்கை கடற்படை ஒருபக்கம் என்றால், இலங்கை கடற் கொள்ளையர்கள் மறுபக்கம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது , அவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது என அச்சுறுத்தி வருகின்றனர்.
சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாவிட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இருப்பினும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அரசு பலமுறை வலியுறுத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, படகுடன் சேர்த்து இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து காங்கேசம் துறை கடற்படை தளத்திற்கு மீனவர்களை அழைத்துச்சென்று, அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.