தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் விருப்பமாக உள்ளது என்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் பாஜக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியை நடத்தி வருவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி வேலைவாய்ப்பின்மையை உருவாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக அரசியலில் புதிதாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்வது இயல்பானது என்றும், யார் ‘தீய சக்தி’, யார் ‘தூய சக்தி’ என்பதை வரும் 2026 தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழக ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து ஏற்கனவே கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது ஆட்சியில் பங்கு என்ற தொண்டர்களின் நீண்டகால விருப்பம் குறித்துக் கட்சியின் தலைமை இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். 2026 தேர்தல் களம் புதிய கட்சிகளின் வரவால் மாறியுள்ள நிலையில், காங்கிரஸின் இந்த ‘ஆட்சியில் பங்கு’ முழக்கம் கூட்டணி அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
