ஈரோட்டில் சதமடித்த வெயில்!

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.4 டிகிரி செல்சியஸ் (102.92 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது.

நாளை தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author