பிரேசிலுக்கு ஆகாஷ் ஏவுகணைகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின், பாதுகாப்பு அமைச்சர் ஜோஸ் முசியோ ஆகியோர் இந்தியா வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையைப் பிரேசிலுக்கு வழங்க இந்தியா முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.
5.8 மீட்டர் நீளம், 710 கிலோ எடை கொண்ட ஆகாஷ் ஏவுகணை மணிக்கு 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். 18 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் எதிரி நாட்டின் இலக்குகளை குறிவைத்து அழிக்கும் திறன் உடையது.
ஒரே நேரத்தில் எதிரிநாட்டின் பல இலக்குகளைக் குறிவைத்து அழிக்கும் சக்தி படைத்த ஆகாஷ் ஏவுகணைகளால் பாகிஸ்தானின் ட்ரோன்கள் நொறுக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு வலிமை வாய்ந்த ஏவுகணையை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முன்வந்திருப்பது இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.